3 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்


3 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்
x

வேலூரில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. அப்போது 3 மாடி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இதில் நூலிழையில் பொக்லைன் டிரைவர் உயிர் தப்பினார்.

வேலூர்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து காகிதப்பட்டறை டான்சி வரையில் சாலையோரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்தக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதற்காக 3 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. பெரிய கட்டிடங்கள், வீடுகள் ஒவ்வொன்றாக இடிக்கப்பட்டன. இதனால் காலை 9 மணி முதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வேலூர்- ஆற்காடு சாலையில் கலெக்டர் அலுவலக மேம்பால பகுதியில் இருந்து டான்சி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

3 மாடி கட்டிடம்

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டிடத்தின் இருபுற சுவர்களும் இடிக்கப்பட்டன. மேலும் கட்டிடத்தை தாங்கும் அனைத்து தூண்களும் இடிக்கப்பட்டது. ஒருக்கட்டத்தில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழும் நிலைக்கு சென்றது. எனவே மேற்கொண்டு அந்த கட்டிடத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சிலமணி நேரம் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை நிறுத்தி வைத்தனர். இதனை முன்னிட்டு அந்தப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்ஒயர்கள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் மதியம் 1.30 மணி அளவில் திருமணி அக்ராவரத்தை சேர்ந்த சதீஷ் (வயது 35) என்பவர் பொக்லைன் மூலம் கட்டிடத்தை இடித்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது.

உயிர் தப்பினார்

கட்டிடத்தின் சில பகுதி பொக்லைன் எந்திரம் மீது விழுந்தது. கட்டிடம் இடிந்த போது அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. பொக்லைன் எந்திரத்தில் இருந்த சதீஷ் என்ன? ஆனார் என்று அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். தொடர்ந்து அவர் புகை மண்டலத்தில் இருந்து கை, கால்கள் நடுங்கியபடி வெளியே வந்தார். அவரை அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

மேலும் கட்டிட இடிபாடுக்குள் சிக்கிய அந்த பொக்லைன் எந்திரத்தை மற்றொரு எந்திரம் மூலம் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.


Next Story