சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் இடிப்பு


திருமருகல் அருகே ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் இடிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் இடிக்கப்பட்டது.

சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் 1 ஆண்டுக்கும் மேல் எந்தவித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து காணப்பட்டது.. கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அருகில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.

இடித்து அகற்றம்

இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் பழைய கட்டிடத்தை புதுபிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. மேலும் ஊராட்சி சேவை மையம் மூடக்கப்பட்டுள்ளது. இந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 23-ந்தேதி படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story