திருவாலங்காடு ஒன்றியத்தில் பழுதடைந்த 22 பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்
திருவாலங்காடு ஒன்றியத்தில் பழுதடைந்த 22 பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
22 பள்ளி கட்டிடங்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து உறுதி தன்மையற்ற கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகளக்காட்டூர், திருவாலங்காடு, காஞ்சிபாடி, லட்சுமாபுரம், நெடும்பரம், பனப்பாக்கம், தொழுதாவூர், வீரராகவபுரம், குப்பம்கண்டிகை, வேணுகோபாலபுரம், அரிசந்திராபுரம், ராமாபுரம், நெமிலி, சிவ்வாடா, பூனிமாங்காடு, மாமண்டூர் மற்றும் ஜாகீர்மங்களம் என 17 ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி,தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 22 கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து மீண்டும் புனரமைக்க முடியாத நிலையில் உள்ளது.
இடித்து அகற்றம்
எனவே இந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நெமிலி, நெடும்பரம் போன்ற ஊராட்சிகளில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. சேதமடைந்த பள்ளி கட்டிடத்தில் பயின்ற மாணவர்களுக்கு மாற்று இடங்களில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.