குப்பைகளை உரமாக்கும் மையம் இடித்து அகற்றம்
பொள்ளாச்சியில் புதிய பஸ் நிலையம் கட்ட இடையூறாக இருந்த குப்பைகளை உரமாக்கும் மையம் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் புதிய பஸ் நிலையம் கட்ட இடையூறாக இருந்த குப்பைகளை உரமாக்கும் மையம் இடித்து அகற்றப்பட்டு உள்ளது.
உரமாக்கும் மையம்
தென்னை நகரமான பொள்ளாச்சியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனாலும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண முடியவில்லை. முகூர்த்த நாட்களில் பொள்ளாச்சி நகரம் வாகன நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக சி.டி.சி. மேட்டில் ரூ.7 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இதற்கிடையில் பஸ் நிலையம் கட்டப்பட உள்ள இடத்தில் மண்ணை சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த நுண் உரமாக்கல் மையம்(குப்பைகளை உரமாக்கும் மையம்) இடித்து அகற்றப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அங்கு கொண்டு வரப்படும் உரங்கள் வேறு நுண் உரமாக்கல் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
பஸ் நிலையம் கட்டும் பணி
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சி.டி.சி. மேட்டில் பஸ் நிலையம் அமைக்க 3.83 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பஸ் நிலையம் கட்டுவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்தில் 64 கடைகள், 40 பஸ்கள் நிறுத்தும் வகையில் இடவசதி(பஸ் ரேக்) கட்டப்படுகிறது.
இதற்கிடையில் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த நுண் உரமாக்கல் மையம் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. மகாலிங்கபுரம், வார்டு எண் 20, 21, 22, 24, 25 மற்றும் 31 ஆகிய பகுதிகளில் இருந்து உரமாக்கல் மையத்திற்கு குப்பைகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 4 டன் மக்கும் குப்பை சேகரிக்கப்பட்டது. அவை ஜோதி நகர் மற்றும் சுதர்சன் நகர் நுண் உரமாக்கல் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளதால் பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.