ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்


ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்
x

நெமிலி அருகே ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டின் உரிமையாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ஆக்கிரமிப்பு வீடு

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள பெரப்பேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பாதை புறம்போக்கு இடத்தை ரவி என்பவரின் மனைவி ரேணுகாதேவி (வயது 50) ஆக்கிரமிப்பு செய்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெரப்பேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டில் கோர்ட்டு உத்தரவை ஒட்டினர். இந்தநிலையில் நேற்று நெமிலி தாசில்தார் சுமதி தலைமையில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் கனிமொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாலமன் ராஜா, பாரதி ஆகியோர் சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு மற்றும் மாட்டுக் கொட்டகையை அப்புறப்படுத்த முயன்றனர்.

தீக்குளிக்க முயற்சி

இதற்கு வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வீட்டு உரிமையாளர் ரேணுகாதேவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீடு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story