வேளாண்மை அலுவலக பழைய கட்டிடம் இடிப்பு


வேளாண்மை அலுவலக பழைய கட்டிடம் இடிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2023 4:15 AM IST (Updated: 26 Aug 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் வேளாண்மை அலுவலக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் வேளாண்மை அலுவலக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.

பழுதடைந்த கட்டிடம்

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளைநிலங்கள் அதிகமாக உள்ளன. இங்கு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசின் புதிய திட்டங்கள், மானியங்கள் மற்றும் விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்குவதை அறிந்துகொள்ள ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த 1970-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் அமைக்கப்பட்டது. அங்கு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துைற இருப்பு கிடங்கும் கட்டப்பட்டது.

இந்த அலுவலகம் விவசாயிகள் தங்களது விவசாயம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை கேட்டு, அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து வந்தனர். இதற்கிடையே வேளாண்மை அலுவலகம் கட்டி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. ஆங்காங்கே புதர் செடிகள் வளர்ந்து இருந்தது. மேலும் சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தன.

அலுவலகம் தற்காலிகமாக மாற்றம்

இதனால் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை இருந்தது. மேலும் மழைநீர் உள்ளே கசிந்து கோப்புகள் நனையும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து வேளாண்மை அலுவலகத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பழைய கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேளாண்மை அலுவலகம் ஆனைமலையில் உள்ள சமுதாயக்கூடத்திற்கும் தோட்டக்கலை அலுவலகம் ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கும் மாற்றப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து வேளாண்மை அலுவலக பழைய கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆனைமலையில் வேளாண்மை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலக பழைய கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story