தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார் மயமாக்குவதை கைவிட கோரியும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் நாட்டாண்மை கட்டிடம் வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர்விழி, துணைத்தலைவர்கள் ராஜா, ஜெயக்குமார், மாநில பொருளாளர் ரமேஷ் உள்பட அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு-தனியார் பங்கேற்பு என்ற பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது, தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு, பணிநிரந்தரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.