கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-சேலத்தில் நடந்தது


கள் இறக்க அனுமதி கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-சேலத்தில் நடந்தது
x

கள் இறக்குவதற்கு அனுமதி கேட்டு விவசாயிகள் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஆர்ப்பாட்டம்

விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு கள் இயக்கம், இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் கள் இறக்குவதற்கு அனுமதி கேட்டு நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கினார். விவசாய முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல ராசாமணி, இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று கள் தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளை விவசாயிகள் கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் செல்ல ராசாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டம்

பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும். கள் விற்பனைக்கு அனுமதி அளிக்க கேட்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கள் இறக்கி விற்க அனுமதிக்கும் கட்சி தான் விவசாயிகள் ஆதரவு அளிப்பார்கள். மேகதாது அணை கட்டுவதை தடுக்காவிட்டால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதி பாலைவனமாகி விடும். கொப்பரை தேங்காயை மத்திய அரசு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து கிலோ ஒன்றுக்கு ரூ.150 வழங்க வேண்டும். சத்துணவுடன் மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 முறை இளநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story