கோடநாடு கொலையில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்திசேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்
சேலம்
கோடநாடு கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி, அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கோடநாடு கொலை, கொள்ளை குறித்து துரிதமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தி சேலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மற்றும் அ.ம.மு.க. வினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் (புறநகர் மேற்கு), ஜெய்சங்கர் (புறநகர் மத்திய), ராஜ்குமார் (புறநகர் வடக்கு), பெரியசாமி (புறநகர் கிழக்கு) ஆகியோர்முன்னிலை வகித்தனர்.
இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் யார்? இருக்கிறார்கள் என்று கூறியவர்களுக்கு சேலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எங்களுடன் உள்ளார்கள் என்று கூறிக்கொள்கிறேன். கோடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை, கொள்ளை நடந்த போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஏன் கோடநாட்டிற்கு சென்று பார்க்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொலை, கொள்ளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரை சந்தித்து மனு கொடுத்தார். கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜனாதிபதியை சந்திப்பேன் என்று கூறினார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து அ.தி.மு.க.வை காப்பாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தண்டனை வழங்கப்படும்
ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் பேசுகையில், ஆட்சிக்கு வந்தால் கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை பிடித்தாரே தவிர, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. 4 ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி நடைபெறும். குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்று கூறினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.