தளியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் வனத்துறை அலுவலகம் முன்பு வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தளி மண்டல தலைவர் ஹரிஷ் தலைமை தாங்கினார். விவசாய அணி மண்டல தலைவர் உதயசூரியன் வரவேற்றார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி துணைத்தலைவர் கோவிந்த ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயத்தை காக்க வேண்டும். விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதமாகும் பயிர் சேதாரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ் டி அணி மாநில செயலாளர் பாப்பண்ணா, ஒன்றிய பொது செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி, மற்றும் மார்க்கண்டேஸ்வர ராவ், ஒன்றிய துணை தலைவர்கள் வெங்கடேஷ், கணேஷ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வனவர் ஈஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, சுபாராணி ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.