நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாததை கண்டித்தும், உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாம் தமிழர் கட்சியினர் அதன் மண்டல ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து பல்கலைக்கழகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி பல்கலைக்கழகத்தை நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.

52 பேர் கைது

உடனே போலீசார் அவர்களை வழிமறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அனீஸ் மாத்யூஸ், பேரறிவாளன், மாநில மருத்துவர் அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் ராமஜெயம், மாவட்ட மகளிர் அணி தலைவி காளியம்மாள், தொகுதி செயலாளர் ஆனந்த ஜோதி உள்பட 52 பேரை கைது செய்தனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் சாயல்ராம் கூறுகையில், கொரோனா தொற்றின் காரணமாக முதல் முறையாகவும் புதிய துணைவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் இரண்டாவது, மூன்றாவது முறையாகவும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதனால் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற உயர் படிப்புகளையும் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் இழந்து வருகின்றனர். எனவே உடனடியாக பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்றார்.

விரைவில் பட்டமளிப்பு விழா

இது குறித்து அழகப்பா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கையில், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. புதிய துணைவேந்தர் பேராசிரியர் ரவி பதவி ஏற்ற உடன் அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. எனவே விரைவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றனர்.


Next Story