அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். மத்திய அரசு வழங்கியது போல மாநில அரசும் 1.7.2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கிட வேண்டும், அரசு வேலைவாய்ப்பை தனியாருக்கு தாரைவார்க்க வழிவகை செய்யும் அரசு ஆணை எண் 115-ஐ ரத்து செய்ய வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் பாண்டி, மருத்துவத்துறை நிர்வாக துறை அலுவலர் மாநில துணைத்தலைவர் மூவேந்திரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் வினோத் ராஜா, மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன், மின்வாரிய கூட்டமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்.