பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே குணப்பனேந்தல் கிராமத்தில் உய்ய வந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி பூஜையை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட கிராமத்தினர் ஏற்பாடுகள் செய்தனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பை சேர்ந்த 22 பேர் மீது இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இளையான்குடி போலீசார் ஒருதலை பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறி பா.ஜ.க.வினர் மற்றும் குணப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த பலர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை சந்தைப்பேட்டை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சுகிதா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் அங்கு சென்று இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினர். அப்போது பா.ஜ.க.வினர், அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். பேச்சுவார்த்தை தேதி அறிவிக்கும் வரை இரு தரப்பை சேர்ந்தவர்களும் அமைதி காத்து, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஒத்துழைக்கும் படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.