கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க தர்மபுரி மாவட்ட கிளை சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் துரைராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் மணிக்குமார், துணைத்தலைவர் துரைராஜ், இணைச்செயலாளர்கள் உஷாராணி, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நரசிம்மன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தலைமை நிலைய செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராமன், பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
விவசாய கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்குரிய தொகையை வங்கிகளுக்கு வட்டியுடன் முழுமையாக வழங்கப்பட வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை குழு அமைத்து தீர்வு காண வேண்டும். ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் ஆகியவற்றை அரசு ஆணைப்படி அனைத்து பணியாளர்களுக்கும் குறைபாடுகள் இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் விநாயகம் நன்றி கூறினார்.