தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்மபுரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாக்கியவதி, மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட துணைத்தலைவர்கள் நந்தினி, இனியன், சரவணன், அருண்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி புகழேந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கூட்டுறவுத் துறையில் சில அதிகாரிகள் ஊழியர் விரோத போக்குடன் செயல்படுவதை தடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு துணைப்பதிவாளர், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை தரக்குறைவாகவும், கண்ணியமற்ற முறையிலும் பேசி மாதாந்திர ஊதிய பட்டியலில் கையெழுத்திட மறுக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு துறை ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.






