ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கொரடாச்சேரி ஒன்றியம் அரசவனங்காடு ஊராட்சி பகுதியில் திருவாரூரில் இருந்து குடவாசல் செல்லும் சாலையோரத்தில் பல ஆண்டு காலமாக மக்கள் வசதித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் வந்தனர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், செந்தில், விவசாய சங்க நிர்வாகிகள் மணியன், மருதையன், செந்தில், அரசவனங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுலக்சனா லோகநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் சி.லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் துணை தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்போது வசித்து வரும் இடத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் நத்தம் பட்டா இடம் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். உரிய இடத்தில் நத்தம் பட்டா வழங்கினால் 2 மாதத்தில் வீடுகளை காலி செய்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.