அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு எம்.எல்.ஏ. அலுவலகத்தை உரியவரிடம் ஒப்படைக்கக்கோரி அ.தி.மு.க.வினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அலுவலகத்தை ஒப்படைக்கப்படவில்லை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம் உள்ளார். ஒரத்தநாட்டில் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வாக பதவி ஏற்று 1 ஆண்டுக்கு மேலாகியும் அவரிடம், எம்.எல்.ஏ. அலுவலகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. திடீர் ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் ஒரத்தநாடு எம்.எல்.ஏ. அலுவலகத்தை உடனே ஒப்படைக்கக்கோரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று காலை ஒரத்தநாடு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு முன்பு திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கோவி.தனபால், எஸ். ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், ஒரத்தநாடு நகர செயலாளர் சீனி. அசோகன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது எம்.எல்.ஏ. அலுவலகத்தை மராமத்து செய்து ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.