திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில், அ.தி.மு.க.வினர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூரில், அ.தி.மு.க.வினர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்குதல், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரத்து செய்ததை தவிர வேறு எந்த சாதனையும் தி.மு.க. செய்யவில்லை.

மக்கள் அவதிப்படுகின்றனர்

மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் கைவிடப் போகிறார்கள் என்ற தகவல்கள் வருகிறது. தி.மு.க. ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை மொத்தமாக காலி செய்து விடுவார்கள் என்ற நிலை உள்ளது. மின் கட்டண உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மக்களின் துயரத்தை வெளிப்படுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கனமழையினால் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோஷங்கள்

மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசு மின் கட்டண உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை புறக்கணிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில்பாஸ்கர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story