மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

மின்கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

வீட்டு வரி முதல் மின் கட்டணம் வரை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட இணைச் செயலாளர் அமுதா அருணாசலம், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன் வரவேற்றார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு தந்தார்.

அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டு நிதியை ஒதுக்கி மக்களுக்கு அந்த திட்டங்கள் சென்றடைகின்றதா என்று கண்காணித்து சிறந்த ஆட்சியை தந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தந்து தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவதையும், மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை சிறையில் அடைப்பதிலும் மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது.

அமைதியான முறையில் அரசியல்

அ.தி.மு.க. தமிழகத்தில் அமைதியான முறையில் அரசியல் நடத்த விரும்புகிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுக்காத தி.மு.க. அரசு தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை படிப்படியாக உயர்த்தி வருகிறது.

சமீபத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடவில்லை.

தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. ஒற்றை தலைமையாக தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று உள்ளார்.

சசிகலா, தினகரன் மற்றும் தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

அவரை திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒற்றை தலைமைக்கு தகுதியுடைய எடப்பாடி பழனிசாமிக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து வீட்டுவரி, மின் கட்டணம் உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பர்வதம், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், கோவிந்தராஜ், பாஷ்யம், தொப்பளான், தேவராஜன், ஏ.ஏ.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story