அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பொதுப்பணிநிலை திறன் அமைப்பின் கீழ் பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கூட்டுறவு பதிவாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு முரணாக உள்ளது எனக்கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க விருதுநகர் மாவட்ட கிளை மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலையிலும் பணி மாற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அனைத்து சங்கங்களின் சாவிகளும், பொறுப்புகளும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.