பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டியில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி
பாரதீய மஸ்தூர் சங்கத்தின் 20-வது அகில பாரத பொதுக்குழு கூட்டத்தில் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உரிய பாதுகாப்பு அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், தொழிலாளர்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலாளர் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி பாரதீய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் நிர்வாகிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாரதீய மஸ்தூர் சங்கத்தின் இணைப்பு சங்கமான டி.எப்., எல்.யு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொது செயலாளர் மகேஷ்வரன் மற்றும் செயல் தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.