நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நெல்லை மாவட்டத்தில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை:

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணிகட்டி காந்திய வழியில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பில் ராஜீவ்காந்தி படத்துடன் காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

வருத்தம் அளிக்கிறது

அவர் பேசுகையில், உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் இருந்த ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் பேரறிவாளனை ஏற்கனவே உச்சநீதிமன்றம் குற்றவாளி என்று தண்டனை வழங்கியது. இந்த நிலையில் மீண்டும் அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ராஜீவ்காந்தி கொலையாளிகளை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். இதற்கு எங்கள் மனம் இடம் அளிக்காது" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில ஓ.பி.சி.பிரிவு துணைத்தலைவர் வக்கீல் காமராஜ், நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்ணு, பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி வட்டார தலைவர்கள் கனகராஜ், சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் அலுவலகம்

நெல்லை வண்ணார்பேட்டை காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வாயில் வெள்ளை துணியை கட்டி அறவழி போராட்டம் நடத்தினர்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி

சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே நடந்த அறப்போராட்டத்திற்கு முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமை தாங்கினார். சேரன்மாதேவி வட்டார தலைவர் ராமச்சந்திரன், நகர தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் வாயில் துணியை கட்டிக்கொண்டு மவுன அறப்போராட்டம் செய்தனர். இதில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் அந்தோனிசாமி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணியன், உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் திசையன்விளை காமராஜர் சிலை முன்பு நேற்று அறப்போராட்டம் நடத்தினர்.

கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு, வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வள்ளியூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளியூர் காமராஜர் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். வள்ளியூர் வடக்கு வட்டார தலைவர் அருள்தாஸ், தெற்கு வட்டார தலைவர் சந்திரன், பணகுடி நகர தலைவர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, அனைவரும் வாயில் வெள்ளை துணி கட்டி இருந்தனர். இதில் வள்ளியூர் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி

மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் சார்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, வாயில் துணியை கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சி மூத்த தலைவர் மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story