பா.ஜனதாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடையநல்லூரில் பா.ஜனதாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் இருகட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் பா.ஜனதாவை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவிலில் இருகட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி பா.ஜனதாவினரை கண்டித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். இதில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபீப் ரஹ்மான், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
வாக்குவாதம்
இதேபோல் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே நகர தி.மு.க. நிர்வாகி பிரகாஷ், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சோமசெல்வபாண்டியன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பா.ஜனதாவை கண்டித்தும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை தீவைத்து எரித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பா.ஜனதா நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருகட்சியினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர், இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாசன் மற்றும் போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
தொடர்ந்து அண்ணாமலை உருவப்படத்தை எரித்த தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பா.ஜனதாவினரையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.