கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:46 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்ய கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்ய கோரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம்

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் கோரிக்கை ஏற்கப்பட வில்லை. இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணை எண்.56-ஐ நிறைவேற்ற வேண்டும்.

பணி பாதுகாப்பு, யு.ஜி.சி. தகுதி பெற அவகாசம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கல்லூரி நுழைவுவாயிற் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் குறைப்பு

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து பலர் பேசினர். இதேபோல் ஊட்டி அரசு கல்லூரியிலும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு வகுப்புகளுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:-

பல்கலைக்கழக கல்லூரியாக இருந்தபோது மாத சம்பளம் ரூ.21,500 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அரசு கல்லூரியாக மாற்றிய பிறகு ரூ.20 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மாநிலம் முழுவதும் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுகுறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பணி பாதுகாப்பு இல்லை. எனவே, பணி நிரந்தர செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தினமும் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story