அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 100 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி திருவண்ணாமலையில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத்தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார்.
கிளை பொருளாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். இதில் அரசு கல்லூாி கவுரவ விரிவுரையாளர்களுக்கான அரசாணை 56-ஐ உடனே செயல்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசு கல்லூரிகளில் 20 ஆண்களாக மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் யு.ஜி.சி. தகுதி பெறும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில தகுதி தேர்வு பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதை உடனே நடத்த ஆவன செய்ய வேண்டும்.
மிக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வறுமையில் உள்ள அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய ஊர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.