நகராட்சி பள்ளி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் நகராட்சி பள்ளி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. நகராட்சி பள்ளி துப்புரவு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகிகள் ரவீந்திரன், மாரியப்பன், ராமானுஜம், பேபி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தில் நாள் முழுவதும் துப்புரவு மற்றும் தூய்மை பணி செய்துவரும் தொழிலாளர்களை வெளியேற்றும் வகையில் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியை ஒப்பந்த முறையில் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். நீண்ட காலமாக பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் நிர்வாகிகள் லதா, பாலையா, சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.