கோடநாடு கொலை வழக்கை விரைந்து நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கோடநாடு கொலை வழக்கை விரைந்து நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்த் தலைமை தாங்கினார். அ.ம.மு.க. ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உள்ள மர்மங்களை களைய உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ், செல்வம், சரவணகுமார், பகுதி செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.