பெயிண்டிங் காண்டிராக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பெயிண்டிங் காண்டிராக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெயிண்டிங் காண்டிராக்டர்கள் மற்றும் டிசைனர்கள் நல சங்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தலைவர் திருக்கேத்தீஸ்வரன், செயலாளர் பாலமுருகன் மற்றும் பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் வருகையால் தமிழர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெயிண்டிங், கட்டிட தொழில் உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் ஏராளமான தமிழர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலையில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க வட மாநிலத்தினர் தமிழ்நாட்டில் நுழைவதை தடுக்க உள் நுழைவு சீட்டு முறை அமல்படுத்தப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு குறிப்பிட்ட காலம் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் ஊதியத்தினை வடநாட்டிற்கு அனுப்புவதினால் தமிழ்நாட்டில் வருமானம் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.






