வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட பதவி உயர்வு வருவாய் அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட இணைச் செயலாளர் இருளாண்டி கோரிக்கைகளை விளக்கி பேசினார். பொருளாளர் அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தின் போது வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு பெற்றவர்களை அரசு பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் பணிநியமனம் பெற்ற தட்டச்சர்களின் பின் வைத்து முதுநிலை நிர்ணயம் செய்வது தொடர்பாக தெளிவுரை பெற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வு தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டும் பாரபட்சமாக முதுநிலை நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் குருசாமி நன்றி கூறினார்.