சாலை பணியாளர்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
41 மாத பணி நீக்க காலத்தை பதவி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோவை-திருச்சி ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஊழியர்கள் தங்களது உடலில் நாமம் வரைந்து கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கு கோட்ட தலைவர்கள் முருகேசன், முருகவேல், ராஜேந்திரன், வெற்றிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மாநில துணை தலைவர் ராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது, 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைப் பணியாளர்க ளுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆயத்தப்படி, நிரந்தர பயணபடி, சீருடை சலவைப்படி ஆகியவை வழங்க வேண்டும். நெடுஞ்சாலை களை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரரே 5 ஆண்டுகள் அந்த சாலையை பராமரிக்கும் ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்றார். இதில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






