சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வணிகக்குழுவை முறையாக செயல்படுத்தக்கோரி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வணிகக்குழுவை முறையாக செயல்படுத்திட கோரி திருவாரூரில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து தெரு வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுத்து உரிய ஸ்மார்ட் கார்டு, வியாபார சான்றும் வழங்கிட வேண்டும். வணிகக்குழு தேர்தலை முறையாக காலத்தில் நடத்திட வேண்டும். வணிக குழுவை முறையாக செயல்படுத்திட வேண்டும். சட்டப்படி குறைதீர் குழுவை அமைத்திட வேண்டும். அனைவருக்கும் வங்கி கடன்வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஏ.ஜ.டி.யூ.சி. சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத், நிர்வாகிகள் புலிகேசி, நாகராஜ், மாரியப்பன், தர்மதாஸ், செல்லமணி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.