நம்பியூர், கோபி, அந்தியூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நம்பியூர், கோபி, அந்தியூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பியூர், கோபி, அந்தியூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நம்பியூர்
நம்பியூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுருநாத் பிரபு என்பவர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான பணியை சிறப்பாக செய்யவில்லை என்று கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து கோஷம் எழுப்பினர்.
கோபி
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்டார தலைவர் புவனம் தலைமை தாங்கினர். செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், வட்டார துணைத்தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் நிர்மல் குமார் தலைமை தாங்கினார்.
இதில் ஏராளமான ஊராட்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.