தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம் தாலுகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குடியாத்தத்தை அடுத்த அக்ராவரத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் எம்.கோபால், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஜி.கோவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். நிர்வாகிகள் சத்யா, மகாலட்சுமி, தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
பீடி சங்க பொருளாளர் சிலம்பரசன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், தாலுகா தலைவர் தசரதன், பொருளாளர் ரகுபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கோட்டீஸ்வரன், ஆட்டோ சங்க மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் பாண்டுரங்கன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மாநில தலைவர் சண்முகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை ஆதரித்தும், ஆம்பூர் சர்க்கரை ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி 600 ரூபாய் கூலி கேட்டும், குடியாத்தம்-ஜிட்டப்பல்லி, கொட்டாரமடுகு வழியாக மோர்தானா அணைக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும், அக்ராவரம் கால்நடை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.