டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
கோவை
கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ஆர்ப்பாட்டம்
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் திருச்செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சட்டவிரோத மதுக்கூடங்கள் நடத்திடகாரணமாக இருந்த அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து இழப்பீட்டுத் தொகையை வசூல் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சங்க தலைவர்கள் மீது பழி வாங்கும் நோக்கோடு செய்யப்பட்ட பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
50பேர் கைது
இவ்வாறு அவர்கள் கூறினர்.இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:- டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசில் அனுமதி வாங்கி இருந்தனர். ஆனால் இதில் பங்கேற்ற தலைவர்கள் சிலர் அரசு மற்றும் தனிப்பட்ட நபர்கள் மீது குற்றம் சாட்டி பேசியதற்காக நாங்கள் அவர்களை கைது செய்துள்ளோம் என்று கூறினார்.