பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
மாநிலங்களில் உள்ள ஐ.ஐ.டி.க்கள் உள்பட மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வின் இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிராக பாரதீய ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு, தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். நகர தலைவர் வினோத் வரவேற்று பேசினார். இதில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்மொழி மீது அக்கறை சலுத்தாமல் உள்ள தி.மு.க.வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் அழகிரி, ஸ்ரீதர், ராஜமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில் பாலு நன்றி கூறினார்.