தருமபுரம் ஆதீனம் பல்லக்கு வீதி உலாவுக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


தருமபுரம் ஆதீனம் பல்லக்கு வீதி உலாவுக்கு தடை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் பல்லக்கு வீதி உலாவுக்கு தடைவிதிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் பல்லக்கு வீதி உலாவுக்கு தடைவிதிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்லக்கில் வீதி உலா

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம், சைவ மடங்களுள் பழமையான மடமாகும். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற பல சிவாலயங்கள் உள்ளன. தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பட்டின பிரவேச விழா நேற்று இரவு நடைபெற்றது.விழாவையொட்டி நேற்று முன்தினம் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள், ஆதீன மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆதீன மடத்தை வந்தடைந்தார்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில், தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கு வீதி உலாவுக்கு தடை விதிக்கக்கோரி மயிலாடுதுறையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வக்கீல் ராஜா, மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் வாஞ்சிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலுகுணவேந்தன் ஆகியோர் பேசினர்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்து 4 வேன்களில் ஏற்றி குத்தாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story