மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பேராவூரணி:
பேராவூரணியில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பேராவூரணி முதன்மை சாலையில் உள்ள 2 மதுக்கடைகள், மாவடுகுறிச்சி மாந்தோப்பில் உள்ள மதுக்கடை ஆகியவற்றை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றின் சார்பில் பேராவூரணி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச்செயலாளர் இந்துமதி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி கண்டன உரையாற்றினார்.
தாசில்தாரிடம் மனு
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரச்செயலாளர் ரங்கசாமி, திராவிடர் விடுதலைக்கழக மாவட்டச்செயலாளர் திருவேங்கடம், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் அப்துல் சலாம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச்செயலாளர் மைதீன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டு மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தாசில்தார் சுகுமாரை சந்தித்து மதுக்கடைகளை மூடக்கோரி மனு அளித்தனர்.