மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பராமரிப்பு பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்பாதை பராமரிப்பு பணியின் போது ஒப்பந்த தொழிலாளர் வெயில் செல்வன் என்பவர் திடீரென மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். முத்துராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து உடன் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் பஜார் போலீசார் மின்வாரிய ஏஜென்ட், மின்பாதை ஆய்வாளர், அப்பகுதி வயர் மேன், மின்வாரிய நிர்வாக என்ஜினீயர், இளநிலை பொறியாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் நேற்று மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்சாரம் தாக்கி இறந்த வெயில்செல்வன் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். காயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய மேற்பார்வை என்ஜினீயரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்தனர்.