விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி, கோட்டூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது.
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டி, கோட்டூரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்தது.
இழப்பீடு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா மற்றும் தாளடி நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் மீண்டும் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாரிமுத்து எம்.எல்.ஏ.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மாவட்ட விவசாய துணைத் தலைவர் கே.ஆர்.ஜோசப், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜெயபால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர், நகர செயலாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதைப்போல கோட்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் பரந்தாமன், ஒன்றிய செயலாளர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள். சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சதாசிவம், தமிழ்நாடு விவசாய சங்க நகர செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.