மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் பங்கேற்பு


மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Feb 2023 7:30 PM GMT (Updated: 2023-02-14T01:00:50+05:30)

ரா.முத்தரசன் பங்கேற்பு

ஈரோடு

மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் கலந்து கொண்டார்.

கண்டன ஆர்ப்பாட்டம்

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும், அதானி குழும நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பங்குச்சந்தை மோசடிகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சூளை பஸ் நிறுத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் எஸ்.சின்னசாமி, எம்.குணசேகரன், என்.ரமணி, ஜி.வெங்கடாசலம், கே.சக்திவேல், பி.என்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி ஆகியோர் பேசினார்கள்.

ரா.முத்தரசன்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பி.எல்.சுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.திருநாவுக்கரசு, சு.மோகன்குமார், வி.பி.குணசேகரன், சி.எம்.துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சி

முன்னதாக மாநில செயலாளர் ரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் தமிழர்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கிறார். அவரைப்பொறுத்தவரை எந்த கருத்தையும் ஆதாரமில்லாமல் சொல்ல மாட்டார்.

மூத்த அரசியல் தலைவர். அவர் கூறுவதுபோல் பிரபாகரன் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி. அவர் இந்த நேரத்தில் ஏன் சொன்னார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.

ஆனால், அவர் சொன்னதுபோல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற தகவல் உண்மையானால் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

விளக்கம் அளிக்க வேண்டும்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்து வருகிறோம். எதிர் அணி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்ய வருகிறார். அப்படி பிரசாரத்துக்கு வரும் போது மத்திய பட்ஜெட் குறித்து, குறிப்பாக 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி குறைத்தது குறித்து அவர் பதில் சொல்ல வேண்டும்.

மவுனியாக இருக்கிறார்

தி.மு.க.வில் உள்ள கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும் தி.மு.க. செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டவில்லை என்றும் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். வாய் மூடி மவுனியாக இருப்பவர் யார்? என்று இந்த உலகத்துக்கே தெரியும், நாட்டுக்கே தெரியும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான நாள் முதல் இன்று வரை வாய் மூடி மவுனியாக இருக்கிறார். சட்டப்பேரவையில், அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையில் பல பகுதிகளை விட்டு விட்டு கவர்னர் படித்தார். ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கண்டித்தார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தும் கூறவில்லை. மவுனம் சாதித்தார். பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்களை கூட கவர்னர் படிக்கவில்லை. அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்து விட்டு அவர் பெயரையே கவர்னர் படிக்கவில்லை என்று கண்டிக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. இன்றைக்கும் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறினார்.


Next Story