மயிலாடுதுறையில், ஆர்ப்பாட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில், ஆர்ப்பாட்டம் நடந்தது
இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை திரும்பபெறக்கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அறிவழகன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் மணிபாரதி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் சிங்காரவேலன், அமுல்காஸ்ட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கச்சேரிசாலை வழியாக கிட்டப்பா அங்காடி சந்திப்பை வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரேசன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.