தடையை மீறி ஆர்ப்பாட்டம்: நடத்திய பா.ஜனதா, இந்து முன்னணி அமைப்பினர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம்: நடத்திய பா.ஜனதா, இந்து முன்னணி அமைப்பினர் கைது
x

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: நடத்திய பா.ஜனதா, இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மலைக்கோட்டை, ஆக.17-

திருச்சியை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகளை மதுரை போலீசார் பொய்வழக்கு போட்டு கைது செய்ததாகவும், இதை கண்டித்து திருச்சி சத்திரம் பஸ்நிலையம் முன் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று மாலை தடையை மீறி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் 8 பெண்கள் உள்பட 78 பேர் திரண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 78 பேரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுபோல், இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணனை கைது செய்ததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் நேற்று திருச்சி மரக்கடை பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் இதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் ஜீவரத்தினம், சுரேஷ்பாபு உள்பட திரளானோர் மரக்கடை பஸ்நிறுத்தம் அருகே திரண்டனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதியில்லை என்று கூறியதால், இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து முன்னணியினர் 72 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அப்போது, போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டங்களையொட்டி சத்திரம் பஸ்நிலையம், மரக்கடை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் கைது செய்யப்பட்ட பா.ஜனதா கட்சியினர் மீது கோட்டை போலீசாரும், இந்து முன்னணியினர் மீது காந்திமார்க்கெட் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை கைது செய்ததை கண்டித்து உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா திருச்சி மாவட்ட செயலாளர் கமலி, இந்து முன்னனி திருச்சி மாவட்ட செயலாளர் விமல் ஆகியோர் தலைமை தாங்கினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story