மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

திராவிட சமத்துவ கட்சி மற்றும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிட சமத்துவ கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், தி.மு.க. நிர்வாகி விநாயக மூர்த்தி, தலித் விடுதலை கட்சி இணை பொதுச்செயலாளர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணிப்பூரில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், படுகொலை சம்பவங்களை கண்டித்தும், இதனை தடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

முன்னதாக சமூக நீதி மக்கள் கட்சி மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் கலந்து கொண்டு பேசும்போது, 'மணிப்பூர் மாநிலத்தில் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று, வன்முறை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளது. தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக பழங்குடியின மக்கள் மீது வன்முறை கும்பலால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கு பொறுப்பேற்று அந்த மாநில அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் பதவி விலக வேண்டும்' என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிட சமத்துவ கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், சமூக நீதி மக்கள் கட்சி ஊடகப்பிரிவு செயலாளர் சதீஷ் பாபு, ஜெய் பீம் மக்கள் கட்சி தலைவர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story