தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வலியுறுத்தி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்


தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வலியுறுத்தி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்
x

பொள்ளாச்சியில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வலியுறுத்தி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் முடிவு செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வலியுறுத்தி 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் முடிவு செய்தனர்.

பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி, கொப்பரை தேங்காய் கொள்முதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் வருகிற 13-ந்தேதி காலை 10 ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ஆர்ப்பாட்டத்திற்கு திரளான விவசாயிகளை கலந்து கொள்ள செய்யும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் தென்னிந்திய தென்னை சாகுபடியாளர் சங்க தலைவர் கிருஷ்ணசாமி, தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். பின்னர் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நேரடியாக தேங்காய் கொள்முதல்

தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் தென்னை விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் தயாரிப்பதில் பருவமழை காலம் மற்றும் சிறு, குறு விவசாயிகளின் பொருளாதார சிக்கல்களால் விவசாயிகளால் கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்ய முடியவில்லை. எனவே குறைந்தபட்ச ஆதார விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வது போன்று, தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்தால் அரசின் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று அடையும். எனவே விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் ரூ.105.90-க்கு கொள்முதல் செய்வதற்கு அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. ஆனால் நடைமுறையில் முழுமையாக அனைத்து தென்னை விவசாயிகளும் பயன்பெற இயலவில்லை.

தென்னை நல வாரியம்

தற்போது மார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை ரூ.82 மட்டுமே உள்ளது. விலை வீழ்ச்சியை தடுக்கும் அரசின் கொள்முதல் குறியீட்டு இலக்கை அடைவதற்கு ஏதுவாக போர்க்கால அடிப்படையில் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஆவண செய்ய வேண்டும். மேலும் கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150 நிர்ணயம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளில் மானியத்தோடு பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்கவும், சத்துணவு திட்டத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த தேங்காய் எண்ணெயை பயன்படுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தில் இருந்து தமிழகத்தின் தென்னை உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கிடைக்க வேண்டிய செயல்முறை பண்ணை விளக்க திட்டம், தென்னை மறுநடவு திட்டம் போன்ற திட்டங்கள் கடந்த இரு ஆண்டுகளாக கிடைக்கவில்லை. எனவே அவற்றை விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தென்னை விவசாயிகளின் நலனுக்காக தென்னை நல வாரியத்தை உடனடியாக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story