அரசு மணல் குவாரியை மூடக்கோரி நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்
ஏனாதிமங்கலத்தில் உள்ள அரசு மணல் குவாரியை மூடக்கோரி நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தே.மு.தி.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய, நகர தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருவெண்ணெய்நல்லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சங்கர், நகர பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், ஏழுமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஏனாதிமங்கலம் தெண்பெண்ணையாற்றில் கடந்த 2011-ம் ஆண்டு மணல் குவாரி செயல்பட்டது. அப்போது அளவுக்கு அதிகமான மணல் எடுக்கப்பட்டதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இப்பகுதியில் மணல் குவாரி தொடங்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். விழுப்புரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறண்டு, மக்கள் குடிநீருக்கு அல்லல்படும் சூழ்நிலையும் உருவாகும்.
எனவே ஏனாதிமங்கலத்தில் மீண்டும் மணல் குவாரி செயல்படுவதை கண்டித்தும், இதற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்தும், மணல் குவாரியை உடனடியாக மூடக்கோரியும் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது, மேலும் விவசாயிகள், கிராம மக்களிடம் துண்டு பிரசும் வினியோகம் செய்வது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணசாமி, சக்திவேல், மணிகண்டன், அன்பழகன், நகர அவைத் தலைவர் முத்துக்குமரன், மாவட்ட நிர்வாகி குப்பன், ஒன்றிய நிர்வாகிகள் பாஸ்கர், சம்பத், சிவப்பிரகாசம், அருள், முருகன், ஏழுமலை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் செந்தில் நன்றி கூறினார்.