விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
தேனி பகுதியில் தென்னையில் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் குழுவினர் தேனி மாவட்டத்தில் கிராமப்புற பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், செயல்விளக்க நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். அதன்படி, உத்தமபாளையம் வட்டாரத்தில் பயிற்சி பெற்று வரும் இக்கல்லூரி மாணவிகள் பூஜாஸ்ரீ, பூஜா சஹானா ஆகியோர் கூடலூர் பகுதியில் தென்னை மரங்களில் காண்டா மிருக வண்டுகள் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது குறித்த செயல்விளக்கப் பயிற்சி அளித்தனர். அப்போது, வண்டுகளை பிடிக்கும் பொறியை எப்படி பயன்படுத்துவது, சுத்தம் செய்வது மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து மாணவி பூஜா, சஹானா விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அதுபோல், கோவிந்தநகரம் கிராமத்தில் உயிரி உரம் தயாரித்தல் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி ராஜஸ்ரீ, உயிரி உரங்களின் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார். ஊஞ்சாம்பட்டியில் நடந்த செயல்விளக்கப் பயிற்சியில் மாணவி நீத்து, கரும்பு வயலில் செட் சிகிச்சை மற்றும் நோயை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தார். தப்புக்குண்டுவில் நடந்த செயல்விளக்கப் பயிற்சியில் வெண்டை சாகுபடியில் அந்துப் பூச்சியால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறியின் பயன்பாடு குறித்து அக்கல்லூரி மாணவி ரித்திகா விளக்கம் அளித்து, செயல்விளக்கப் பயிற்சி அளித்தார். அதில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.