களியக்காவிளையில்மாணவர் மர்ம மரணத்தின் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
களியக்காவிளையில்மாணவர் மர்ம மரணத்தின் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
களியக்காவிளை:
குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்த அஸ்வின் என்ற மாணவன் கடந்த 17-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
இந்த மரணத்தின் உண்மை தன்மையை போலீசார் இது வரை கண்டு பிடிக்கவில்லை. ஒரு சில அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளி நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்புவதாகவும், சில தனியார் பள்ளிகளும் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தாருக்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். பள்ளி சார்பில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், போலீசார் உண்மைத்தன்மையை விரைந்து வெளியிட கோரியும் களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், மெதுகும்மல் பஞ்சாயத்து தலைவர் சசிகுமார், முன்சிறை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பிரேம்குமார் மற்றும் அதங்கோடு மாயா கிருஷ்ணசாமி கோவில் பக்தர்கள் சங்கத்தினர், பெற்றோர்கள், இந்து அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் களியக்காவிளையில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.