டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
x

நெல்லை டவுனில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை மேயர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை டவுனில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணியை மேயர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டெங்கு தடுப்பு

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர வாறுகால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை விரைவுப்படுத்தி அதனை அவ்வப்போது மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் டெங்கு உள்ளிட்ட எந்த காய்ச்சல்களும் பொதுமக்களுக்கு ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.

பேரணி

இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி 4 ரதவீதிகள் வழியாக சென்றது. இதில் கலந்து கொண்டவர்கள் டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

முன்னதாக மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் டெங்கு ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, கவுன்சிலர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் டெங்கு களப்பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை

இந்தநிலையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை விரிவாக்க பகுதிகளில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட காலமானதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்வதில் தடங்கல் ஏற்படுகிறது. அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு மேற்படி குழாய்களை மாற்றுவதற்கு தனியாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.8.30 கோடி ஒதுக்கீடு

மேலும் கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நிரந்தர தீர்வாகவும் சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மேற்கூறப்பட்ட மேலப்பாளையம், பாளையங்கோட்டை விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பழைய பிரதான குழாய்களை அகற்றி புதிதாக குழாய் அமைக்க ரூ 8.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சேவியர் காலனி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து மகிழ்ச்சிநகர் மற்றும் ஆசிரியர் காலனி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நிரப்பி ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மகிழ்ச்சிநகர், என்.ஜி.ஓ. பி காலனி, எழில்நகர், திருமால்நகர், பெருமாள்புரம் சி காலனி, குமரேசன் காலனி, கனராபேங்க் காலனி, பி.ஏ.பிள்ளை நகர், தியாகராஜநகர், எல்.கே.எஸ் நகர், அன்புநகர் ஆகிய இடங்களில் உள்ள 12 குடிநீர் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மேயர் பி.எம்.சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.


Next Story