டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சமூக நலத்துறை சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் வரவேற்றார்.
மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் ஆரணி சாலை, மூஞ்சூர்பட்டு சாலை, வேலூர் சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மருத்துவமனையில் முடிவடைந்தது. 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மருத்துவர்கள் மணிமேகலை, தேன்மொழி, பார்த்திபன், சுகந்தி, சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.