டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்
ஆனைமலை பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனைமலை
ஆனைமலை பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தற்கால பணியாளர்கள் மூலம் வீடு வீடாக டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி மருந்து ஊற்றுதல், விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழைக்காலங்களில் வீடுகளில் இருக்கும் திறந்த நிலையில் உள்ள தொட்டிகள், தேவையில்லா பொருட்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் ஏ.டி.எஸ். வகையான கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை குடிநீர் தொட்டிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் குளிர்சாதன பெட்டிகள், குளிர்பதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காய்ச்சல், வாந்தி, தோலில் தடிப்புகள், உடல்வலி மற்றும் மூட்டுவலி போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.